மலை தேனீக்கள் கொட்டி 4 பேர் படுகாயம்


மலை தேனீக்கள் கொட்டி 4 பேர் படுகாயம்
x

குடியாத்தம் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேருக்கு மொட்டையடித்து சிகிச்சையளிக்கப்பட்டது.

வேலூர்

மலை தேனீக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று மாலையில் அதே பகுதியில் உள்ள மூலப்பாறை என்ற மலையில் உள்ள பாறையில் மலை தேனீக்கள் கூடு கட்டி இருந்ததை எடுக்க தீப்பந்தத்துடன் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியுள்ளது. சிலர் தப்பி ஓடி விட்டனர். மூன்று பேரை தேனீக்கள் கொட்டியது. இதில் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் வேலை செய்துவரும் மோகன்பாபு (வயது 20), ராஜேஷ் (19) ஆகிய இருவருக்கும் உடல் மற்றும் தலை முழுவதும் தேனீக்கள் கொட்டி கொடுக்குகள் இருந்ததால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் மூலம் மொட்டை அடித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

காதுக்குள் புகுந்தது

டாக்டர்கள் எஸ்.மஞ்சுநாத், கே.மணிகண்டன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மோகன்பாபு மற்றும் ராஜேஷ் உடலில் இருந்த ஏராளமான தேனீக்களின் கொடுக்குகளை அகற்றினார்கள்.

அதேபோல் இவர்களுடன் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் சசி (15) என்பவரையும் தேனீக்கள் விரட்டியதில் தவறி விழுந்து இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது காதுக்குள் இருந்த தேனீயை டாக்டர்கள் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் சரண் (13) அப்பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த தேன் கூட்டை சிறுவர்களுடன் சென்று கலைக்க முயன்றுள்ளான். அப்போது தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் சரண் காயம் அடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

தேனீக்கள் கொட்டியதால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டும் தலையில் மொட்டை அடித்தும் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story