கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம்


கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம்
x

விசேஷத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

நேருக்கு நேர் மோதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பள்ளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 45). இவர் அப்பகுதியில் தறிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிச்சாமி, அவரது மனைவி கலையரசி(43), கலையரசியின் சகோதரி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவை சேர்ந்த ரேவதி(45), இவரது கணவர் ராஜ்குமார்(52) ஆகிய 4 பேரும் கரூர் மாவட்டம், புலியூரில் உள்ள பழனிச்சாமியின் மாமனார் வீட்டு விசேஷத்திற்கு காரில் சென்றனர்.

பின்னர் மீண்டும் ஈரோடு அருகே பெருந்துறையில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்வதற்காக கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரை பழனிச்சாமி ஓட்டி வந்தார். இந்நிலையில் காரானது நொய்யல் அருகே ஆசாரி பட்டறை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த கார் நிலைதடுமாறி பழனிச்சாமி ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கின.

4 பேர் படுகாயம்

இதில் காரை ஓட்டிச்சென்ற பழனிச்சாமி, அவரது மனைவி கலையரசி, கலையரசியின் சகோதரி ரேவதி, ரேவதியின் கணவர் ராஜ்குமார் ஆகிய 4 பேருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. காரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஈரோடு அருகே வெண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஜெகநாதன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story