மது குடிக்க அழைத்து சென்று ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது


மது குடிக்க அழைத்து சென்று  ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது
x

திருமங்கலம் அருகே மது குடிக்க அழைத்து சென்று ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே மது குடிக்க அழைத்து சென்று ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மது குடித்துள்ளார்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் காஷாமைதீன் (வயது 64). இவர் பண்டிகை காலங்களில் திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வந்து வேலை பார்ப்பது வழக்கம். இதே போல் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். இந்தநிலையில் அவர் கடை உரிமையாளரிடம் ஊதியம் ரூ.11 ஆயிரத்து 500-யை வாங்கிகொண்டு ஊருக்கு கிளம்பினார். திண்டுக்கல் செல்வதற்கு முன்பு திருமங்கலம் தாலுகா அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார்.

பின்னர் அருகே இருந்த பெட்டிக்கடையில் வாழைப்பழம் சாப்பிட்டார். அப்போது காஷாமைதீனிடம் பணம் இருப்பதை அறிந்த 4 பேர் கொண்ட கும்பல் காஷாமைதீனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னா் மது அருந்த அழைத்துள்ளனர். அதனை ஏற்று காஷாமைதீன் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

பணம், செல்போன் பறிப்பு

விருதுநகர் ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மதுபான கடையில் மதுவாங்கி கொடுத்துள்ளனர். அதன் பின்பு ஆரப்பாளையம் செல்ல வேண்டும் என கூறினார். நாங்கள் உங்களை அங்கு இறக்கிவிடுகிறோம் என கூறி அவரை வாகனத்தில் அழைத்து கொண்டு விருதுநகர் நான்குவழிச்சாலையில், கரிசல்பட்டி அருகே அழைத்து சென்றனர். அங்கு ஆட்கள் இல்லாத இடத்தில் காஷாமைதீனை இறக்கிவிட்டு சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.11,500, செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது.

அப்போது அந்த வழியாக வந்த சிலர் சாலையோரம் ஒருவர் காயங்களுடன் மயங்கி கிடப்பதை கண்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஷாமைதீன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

4 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலத்தில் காஷாமைதீனுடன் பணிபுரிந்த ஜவுளிக்கடையை சேர்ந்த முகமது இத்ரீஸ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் மதுபான கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில் காஷாமைதீனை தாக்கி பணம், செல்போன் பறித்து சென்றவர்கள், திருமங்கலம் கூழையாபுரத்தினை சேர்ந்த முத்துவேல்(19), சோமசுந்தரம் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(19) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story