வாலிபர்களிடம் செல்போன், பணம் பறித்த 4 பேர் சிக்கினர்
வாலிபர்களிடம் செல்போன், பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மேல தோப்புவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). சம்பவத்தன்று இவர் தெற்குவெளி வீதி புதுமகாளிப்பட்டி ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மணிகண்டனை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்த உமையகுமார்(23), சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெரு மணிகண்டன் (22), மாரிச்செல்வம் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதே போன்று சிலைமானை சேர்ந்த பழனிவேல் (39), ஆரப்பாளையம் வைகை தென்கரை பகுதியில் நடந்து சென்றபோது வாலிபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணா பாளையம் 2-வது தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (24) என்பவரை கைது செய்தனர்.