மதுரையில் இருந்து வங்கிக்கு பல லட்ச ரூபாய் எடுத்துச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு 4 பேர் காயம்
மதுரையில் இருந்து வங்கிக்கு பல லட்ச ரூபாய் எடுத்துச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் 4 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்கு மதுரையிலிருந்து பணம் பல லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு ஒரு வாகனம் புறப்பட்டது. அந்த வாகனம் சிவகங்கை படமாத்தூர் அருகே சென்றபோது திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் முன்பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. வாகனத்தில் அதிக அளவிலான பணம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மற்றொரு வாகனத்தின் மூலம் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு நேரடியாக வங்கிக்கு கொண்டு சென்று, பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனத்தில் பயணம் செய்த 2 முன்னாள் ராணுவ வீரர்கள், அதன் டிரைவர் மற்றும் வங்கி அதிகாரி என 4 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.