வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

கிணத்துக்கடவில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரோந்து பணி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று அதிகாலையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், ஏட்டு பிரபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.எஸ்.ரோடு ெரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் சந்தேகப்படும்படி 4 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் கத்தி மற்றும் மிளகாய் தூள் இருந்தது. தொடர்ந்து 4 பேரையும் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

வழிப்பறி முயற்சி

இதையடுத்து நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே முன்னீர் பள்ளம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்த அருணாச்சலம்(வயது 24), புது கிராமம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகன்(26), காங்கேயன்குளம் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(24), தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரம் பகுதியை சேர்ந்த சந்தானராஜா என்ற முப்பிடாதி(26) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அதில் அருணாச்சலம், முருகன், சந்தானராஜா மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 10-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story