ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
டெய்லர் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை திருட்டு
திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் அப்பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்மலாவின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.38,500 திருட்டுப்போனது. இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நிர்மலாவின் கடைக்கு வந்து செல்லும் மரகதம் என்கிற சுபாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
தொடர் விசாரணையில் சுபாவின் கணவர் விக்னேஷ் மற்றும் விக்னேசின் தம்பி தீனதயாளன் ஆகியோர் சேர்ந்து நிர்மலாவின் வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் திருடியதும், அதனை விக்னேசின் தாய் ஈஸ்வரி விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து வீரபாண்டி போலீசார் மரகதம் என்கிற சுபா (28), ஈஸ்வரி (44), விக்னேஷ் (30), தீனதயாளன் (25) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 6½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.