பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
பல்லடம்
பல்லடம் அருகே துப்பாக்கி, அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பயங்கர ஆயுதங்கள்
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சபரி, ஷியாம். இவர்கள் 2 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் எள்ளுக்காட்டுக்கு வந்தனர். அங்கு ஒரு தோட்டத்தை விவசாயம் செய்யப்போவதாக குத்தகைக்கு எடுத்து அங்குள்ள வீட்டில் தங்கினர். ஆனால் 2 மாதம் ஆகியும் விவசாயம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் நட்பாக பழகிக் கொண்டு அவர்களையும் அந்த வீட்டில் தங்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் மூலம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திகேயன், தலைமையிலான போலீசார் அந்த ஆசாமிகள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
4 பேர் கைது
அப்போது அங்கு அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த கேரளாவைச் சேர்ந்த ஹாசிம் (வயது 39), அதே பகுதியைச் சேர்ந்த விபின் தாஸ்(29), சிவகங்கையைச் சேர்ந்த செல்வகணபதி(27), அருள்புரத்தை சேர்ந்த நவீன் ஆனந்த்( 29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 அரிவாள், 1 துப்பாக்கி, 11 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 200கிராம் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 4 பேரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சபரி ஷியாம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மீது கேரளாவில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், அவர்களது எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் வைத்து அவர்களை கொல்ல முயன்றதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்து விவசாயம் செய்வதாக கூறி வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரை கஞ்சா விற்பனை செய்வதற்கும், தங்களது பாதுகாப்புக்கும் வைத்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.