செங்குன்றத்தில் அரிய வகை குரங்கு கடத்தலுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்
அரிய வகை குரங்கு கடத்தலுக்கு உதவியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அசோக். இவர், கடந்த வாரம் போலீஸ்காரர்கள் மகேஷ், கிருஷ்ணமூர்த்தி, வல்லரசு ஆகியோருடன் பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் அரிய வகையான வெளிநாட்டு உராங்குட்டான் குரங்கு ஒன்றை 4 பேர் வெளிநாட்டுக்கு கடத்த சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு செல்வது தெரிந்தது.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார், குரங்கை பறிமுதல் செய்யாமல் இருக்க கடத்தல் ஆசாமிகளிடம் பேரம் பேசி பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அரிய வகை குரங்குடன் கடத்தல் கும்பலை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்று விட்டது.
இந்தநிலையில் குரங்கு கடத்தல் கும்பலுக்கு போலீசார் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதுபற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரும் உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களை அங்கிருந்து தப்பிச்செல்ல அனுமதித்தது உறுதியானது.
இதையடுத்து குரங்கு கடத்தல் கும்பலுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் மகேஷ், கிருஷ்ணமூர்த்தி, வல்லரசு ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.