பஸ்சில் தவறவிட்ட 4 பவுன் நகை பயணியிடம் ஒப்படைப்பு


பஸ்சில் தவறவிட்ட 4 பவுன் நகை பயணியிடம் ஒப்படைப்பு
x

குடும்பத்துடன் பஸ்சில் சென்றபோது தவறவிட்ட 4 பவுன் நகை பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர்

தவறவிட்டனர்

குடியாத்தத்தை அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான் அகமது. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூரு செல்வதற்காக நேற்று முன்தினம் காலை மாதனுர் வந்தார். அங்கிருந்து ஓசூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறி ஆம்பூர் சென்றனர். அங்கு இறங்கி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் 4 பவுன் நகையுடன் ஒரு துணிப்பையை பஸ்சில் தவறவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மஸ்தான் அகமது உடனே மீண்டும் ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு பணியில் இருந்த நேர காப்பாளர் சண்முகசுந்தரத்திடம் பஸ்சில் தான் நகையுடன் துணி பையை தவறிவிட்டது பற்றி தெரிவித்தார். உடனே அவர் ஓசூர் பஸ் நிலையத்தில் பணியில் இருந்த நேர காப்பாளரை தொடர்பு கொண்டு மாதனூரில் இருந்து வரும் அரசு பஸ்சில் துணிப்பை இருந்தால் எடுத்து வைக்கும் படி தகவல் தெரிவித்தார்.

ஒப்படைப்பு

அதன்படி அந்த பஸ் ஓசூர் சென்றவுடன் அதில் ஏறி பார்த்தபோது நகையுடன் துணி பையை இருந்தது. அதை மீட்ட நேரக்காப்பாளர் மீண்டும் ஆம்பூருக்கு வந்த மற்றொரு அரசு பஸ்சில் அதை அனுப்பி வைத்தார். அந்த பஸ் நேற்று முன்தினம் மாலை மாதனூர் வந்தது. அதையடுத்து நகையுடன் இருந்த துணிப்பை ஆம்பூர் அரசு பஸ் நேரக்காப்பாளர் சண்முகசுந்தரம், ஆம்பூர் அரசு பணிமனை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர், பயணி மஸ்தான் அகமதுவிடம் அந்த பையை ஒப்படைத்தனர்.

அதைப்பெற்றுக் கொண்ட அவர்கள் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story