பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 4 பேர் கைது


பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 4 பேர் கைது
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டிய வீடுகளில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

பூட்டிய வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு மற்றும் அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் போன்ற பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்தனர்.

அவர்கள் திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையை சேர்ந்த நாகராஜன் (வயது 50), துவாக்குடிமலையை சேர்ந்த கவுதம் (23), கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ஜீவா என்கிற ஜீவானந்தம் (33) ஆகிய 3 பேர் ஆவார்கள். இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கைதானவர்களை சிறையில் அடைத்த நிலையில் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மழையூர்

இதேபோல மழையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்ட வெட்டன் விடுதி பகுதியில் கடந்த 12-ந் தேதி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த கோபி என்கிற வைரவசுந்தரத்தை (46) போலீசார் கைது செய்தனர். வெள்ளி குத்துவிளக்கு - 1, மடிக்கணினி- 1, 2 கிராம் தங்க நகை, 1 கைக்கெடிகாரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story