ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த வழக்கு-சிபிசிஐடி கண்காணிப்பில் விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு


ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த வழக்கு-சிபிசிஐடி   கண்காணிப்பில் விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
x

மாணவிகள் உயிரிழப்பு சந்தேக மரணம் என்பதில் இருந்து ஆசிரியர்கள் அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என மாற்றி காவல்துறையினர் விசாரித்து வருவதாக குறிப்பிட்டனர்.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றனர். போட்டி முடிந்து, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க ஆசிரியர்களுடன் சென்றனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் மாணவிகள் குளித்தனர்.

ஆழமான பகுதிக்கு மாணவிகள் சென்றதால் நீரில் மூழ்கி 4 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவர்களின் சடலங்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாயனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிகள் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை தாமதமாக நடைபெறுகிறது எனவே இதனை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் புதுகோட்டை பிலிப்பட்டியை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதிடுகையில்,மாணவிகள் உயிரிழப்பு சந்தேக மரணம் என்பதில் இருந்து ஆசிரியர்கள் அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என மாற்றி காவல்துறையினர் விசாரித்து வருவதாக குறிப்பிட்டனர்.இதனை அடுத்து, புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.


Next Story