சத்துணவு சாப்பிட்டதில் திடீர் உடல்நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் 4 மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை


சத்துணவு சாப்பிட்டதில் திடீர் உடல்நலக்குறைவு:  ஆஸ்பத்திரியில் 4 மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை
x

நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்டதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் 21 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்டதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் 21 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகளுக்கு வாந்தி

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுமுன்தினம் மதியம் மாணவிகளுக்கு சாதம், சாம்பார், அவித்த முட்டை மதிய உணவாக வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

4 பேருக்கு தொடர் சிகிச்சை

சத்துணவில் வண்டு கிடந்ததாக மாணவிகள் சிலர் ஆசிரியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள், பள்ளி மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவின் மாதிரிகளையும், அங்கிருந்த அரிசி, முட்டை, பருப்பு, எண்ணெய் போன்றவற்றை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 25 மாணவிகளில் 21 மாணவிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது 4 மாணவிகளுக்கு மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை கவிமணி பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குடிநீர் தொட்டி, சமையல் அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

ஊழியர்கள் மீது நடவடிக்கை

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் கேட்டபோது, "இந்த சம்பவம் தொடர்பாக கவிமணி பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவிகள் சாப்பிட்ட உணவு மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடைபெற்றதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது உறுதியானால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


Next Story