வெடிவிபத்து தொடர்பாக கோவில் நிர்வாகிகள் 4 பேர் கைது
வெடிவிபத்து தொடர்பாக கோவில் நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பந்தட்டை:
வெடிவிபத்து
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது வாணவெடி மற்றும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டன. அப்போது வெடிகளில் ஒன்று சிதறி, பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது.
இந்த வெடி விபத்தில் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரின் மகன் லலித்கிஷோர்(வயது 9) படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தான். ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா(32), திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா(21) ஆகியோர் காயம் அடைந்தனர்.
நிர்வாகிகள் கைது
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன்(27) மணிகண்டன்(34) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து முன் அனுபவம் இல்லாதவர்களை வெடி வெடிக்க செய்ததாக கோவில் நிர்வாகிகள் தேவராஜ்(50), கனகராஜ்(48), ராமலிங்கம்(66), கோவிந்தசாமி(42) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
வெடி விபத்து சம்பவத்தால், கும்பாபிஷேகம் நடைபெற்ற உற்சாகம் இல்லாமல் அரசலூர் கிராமம் களையிழந்து அமைதியாக காணப்படுகிறது.