23 நீர்நிலைகளில் 4 ஆயிரத்து 775 டன் கழிவுகள் அகற்றம் -மாநகராட்சி தகவல்


23 நீர்நிலைகளில் 4 ஆயிரத்து 775 டன் கழிவுகள் அகற்றம் -மாநகராட்சி தகவல்
x

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 23 நீர்நிலைகளில் 4 ஆயிரத்து 775 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் ஆறுகள், நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய 'ரொபாடிக் எக்ஸ்கவேட்டர்', 'ஆம்பிபியன்' போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தூர்வாரும் பணிகள்

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு பக்கிங்காம் கால்வாயில் 790 டன்களும், மாம்பலம் கால்வாயில் 750 டன்களும், வேளச்சேரி கால்வாயில் 450 டன்களும் மற்றும் பள்ளிக்கரணையில் 430 டன்களும் என மொத்தம் 23 நீர்நிலைகளில் 4 ஆயிரத்து 775 டன் வண்டல்கள் மற்றும் கழிவுகள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளது.

இந்த நீர்வரத்து கால்வாய்கள் செல்லும் முக்கிய சாலைகளில் பல்வேறு இடங்களில் குறுக்கு பாலங்கள் உள்ளன. குறிப்பாக மாம்பலம் கால்வாய் செல்லும் தியாகராயநகர், ஜி.என்.செட்டி சாலை, விஜயராகவா சாலை, சர்.பிட்டி தியாகராய சாலை, வெங்கட் நாராயணா சாலை, தெற்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் உள்ள குறுக்கு பாலங்களின் கீழ்ப்பகுதிகளில் நவீன எந்திரங்களை கொண்டு வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் பருவமழைக்கு முன்னதாக முடிக்கும் வகையில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story