கழிவறைக்கு சென்ற வாலிபரிடம் கத்தி காட்டி மிரட்டி நகை-பணம் பறிப்பு: 4 திருநங்கைகள் கைது


கழிவறைக்கு சென்ற வாலிபரிடம் கத்தி காட்டி மிரட்டி நகை-பணம் பறிப்பு: 4 திருநங்கைகள் கைது
x

கரூர் பஸ் நிலையத்தில் கழிவறைக்கு சென்ற வாலிபரிடம் கத்தி காட்டி மிரட்டி நகை-பணம் பறித்த 4 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

நகை-பணம் பறிப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மூலூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 32). இவர் கரூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு நேற்று அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது கழிவறை அருேக நின்று கொண்டிருந்த திருநங்கைகள் இசைப்பிரியா (24), ராகவி (27), தில்ஷிகா (23), இனியா (22) ஆகிய 4 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கசங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த ரூ.27 ஆயிரத்து 500-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

திருநங்கைகள் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதையடுத்து பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் திருநங்கைகள் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து செந்தில்குமார் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, திருநங்கைகள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பவுன் தங்கசங்கிலி, ரூ.27 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நேற்று கரூர் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

கரூர் பஸ் நிலையத்தில் அடிக்கடி இதுபோன்று திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பணம் மற்றும் நகைகளை இழந்தவர்கள் தொடர்ந்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். எனவே புகாரின்பேரில் உரிய நடவடிக்கையை போலீஸ் எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தவதனம் உத்தரவிட்டுள்ளார்.


Next Story