விவசாயிகள் உண்ணாவிரதம்
காங்கயம் அருகே 3-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் 4 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
திருப்பூர்
காங்கயம் அருகே உள்ள பகவதிபாளையம் பகுதியில் பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க பாசன விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மேலும் 4 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த பெண்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் சங்கத்தினர் வந்திருந்த அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்கப்போவதாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. உண்ணாவிரத போராட்டத்திற்கு பா.ஜ.க.தேசிய குழு தலைவர் கார்வேந்தன், மாநில செயலாளர் மலர்க்கொடி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.பாதுகாப்புக்காக 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.