போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி ஆன்லைன் மூலம் கார் டிரைவரிடம் பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி ஆன்லைன் மூலம் கார் டிரைவரிடம் பணம் பறித்த 4 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ரூ.5 ஆயிரம் பறிப்பு
கரூர், தாந்தோணிமலையை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 28). கார் டிரைவர். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 13-ந்தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் தான் தாம்பரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதாகவும், தங்களுடைய செல்போன் வாட்ஸ்-அப் எண் ஆபாச படம் எடுக்கும் வாட்ஸ்-அப் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் விசாரிக்க வேண்டி இருப்பதால் சென்னைக்கு வர வேண்டும், வரவில்லை என்றால் கரூர் போலீசாரை வைத்து கைது செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் சுரேந்தர், அவரிடம் பேசிய போது அபராதத்தை கட்டி பிரச்சினையை முடித்துக்கொள்ள வில்லையென்றால் வீட்டிற்கு போலீஸ் வந்து அவமானப்படுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளார்.மேலும் செல்போனில் பேசும்போது பின்னணியில் வாக்கி டாக்கி ஒலியைக்கேட்டு போலீஸ் தான் பேசுகின்றனர் என்று நம்பி பயந்து போன சுரேந்தர் சப்-இன்ஸ்பெக்டர் என்று சொன்ன நபரின் ஜிபே எண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
பின்னர் சுரேந்தர் மற்றும் அவரின் மனைவி இருக்கும் புகைப்படத்தை அனுப்பி மீதி பணத்தையும் அனுப்பவில்லை என்றால் கரூர் போலீசை வைத்து கைது செய்துவிடுவோம் என்றும், வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு போலீசாரை அனுப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
தனிப்படை அமைப்பு
பின்னர் சுரேந்தர் தனது செல்போனில் உள்ள ட்ரூ காலரில் சென்று அந்த எண்ணை அழைத்து பார்த்த போது ஸ்பாம் பெயரில் ரிப்போர்ட் ஆகி இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேந்தர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிந்து அந்த மர்மநபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும் இந்த மர்மநபரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
4 வாலிபர்கள் கைது
இந்தநிலையில் கார் டிரைவரிடம் பணம் பறித்த கும்பல் கோவையில் உள்ள வடவள்ளியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கரூர் தனிப்படையினர் அங்கு சென்று, வடவள்ளியில் பதுங்கி இருந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த மாதவன் (19), கவுதம்சித்தார்த் (19), ஜான் பீட்டர் (19), சந்தன சொர்ண குமார் (19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.மேலும் இவர்கள் கோவை, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி விடுதலையானது ெதரியவந்தது.