கோவில்பட்டியில்மினிவேனில் கடத்திய 40மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டியில்மினிவேனில் கடத்திய 40மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செயயப்பட்டது.
கோவில்பட்டியில் மினிவேனில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மினிவேனில் கடத்தல்
கோவில்பட்டி மேற்கு போலீசார் இளையரசனேந்தல் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்த சிவக்குமார் மகன் செந்தில்குமார் (23), மாரிமுத்து மகன் பேச்சிமுத்து ஆகியோர் ரேஷன் அரிசியை மினிவேனில் கடத்தி வந்தார்களாம். அவர்களை போலீசார் விரட்டினர். அப்போது பேச்சிமுத்து தப்பி சென்று விட்டாராம். செந்தில்குமாரை மட்டும் போலீசார் பிடித்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
தொடர்ந்து போலீசார் சோதனை செய்த போது, அந்த வேனில் 40 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய பேச்சிமுத்தை தேடி வருகின்றனர்.
கட்டணமில்லா தொலைபேசி எண்
மேலும் பொதுவினியோக திட்ட பொருட்களாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றம் ஆகும். இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்ப மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டத்தின் கீழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுவினியோக திட்டபொருட்கள் கடத்தல், பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.