ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்திய ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்திய  ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்  2 பேர் கைது
x

ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

கஞ்சா கடத்தல்

ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை வீராணம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் இரும்பு கம்பிகளுக்கு இடையே 10 மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரி டிரைவர்களான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 26), திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கஞ்சா பறிமுதல்

இதில், இரும்பு கம்பி பாரம் கோவைக்கு சென்றதும், கஞ்சாவை சேலத்துக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.40 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலுக்கு தொடர்புடைய மற்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story