காளைகள் முட்டியதில் 40 பேர் காயம்


காளைகள் முட்டியதில் 40 பேர் காயம்
x

காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளுடன் மல்லுக்கட்டு

அப்போது சீறிப்பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் வந்த காளைகள் அடக்க வந்த வீரர்களை அருகில் கூட நெருங்கவிடாமல் நின்று விளையாடின. அருகில் நெருங்கிய வீரர்களை முட்டி தூக்கி வீசின. இருப்பினும் காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டி, திமிலை பற்றி அடக்கினர்.

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

40 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் 693 காளைகள் களமிறங்கின. 261 வீரர்கள் களம் கண்டனர். காளைகள் முட்டித்தள்ளியதில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story