சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகள் அகற்றம்
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகள் அகற்றம்
மசக்காளிபாளையம்
கோவை மசக்காளிபாளையத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு கடைகள்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலை, மாநகராட்சி சாலைகள் உள்ளன. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதன் காரணமாக இந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது போதிய இடவசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுபோன்று சாலையை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் கடைகைள அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இதை தொடர்ந்து இந்த பகுதிகளில் ஆய்வு செய்த ஆக்கிரமிப்பு செய்த கடைகளை உடனடியாக அகற்ற ஆணையாளர் மு.பிரதாப், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கோவை அவினாசி சாலையில் உள்ள ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் ஆய்வு செய்தனர்.
அதில் இந்த சாலையில் இருபுறத்திலும் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் அவை அகற்றப்படவில்லை.
பொக்லைன் மூலம் அகற்றம்
இதையடுத்து நேற்று கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) குமார், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அத்துடன் பாதுகாப்பு பணிக்காக பீளமேடு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசாரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஆக்கிரமிப்பு பகுதியில் வைத்திருந்த பொருட்களை அகற்றி, பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகளை இடித்து அகற்றினார்கள்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
40 கடைகள்
கோவை மசக்காளிபாளையம் சாலையில், ரோட்டின் இருபுறத்திலும் 1½ கி.மீ. தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்ததுடன், பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம் அடைந்தனர். எனவே அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகள் உடனடியாக இடித்து அகற்றப்பட்டன.
அதுபோன்று இந்த பகுதியில் யாரும் கடைகளை ஆக்கிரமித்து கட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்று எந்த பகுதியிலாவது நடைபாதை, சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருந்தால் அதற்கான ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.