தமிழகத்தில் சோலார், காற்றாலைகள் மூலம் தலா 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி - எரிசக்தித்துறை அதிகாரிகள் தகவல்


தமிழகத்தில் சோலார், காற்றாலைகள் மூலம் தலா 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி - எரிசக்தித்துறை அதிகாரிகள் தகவல்
x

தமிழகத்தில் அனல் மின்சார நிலையங்கள் 3 ஆயிரம் மெகாவாட், சோலார், காற்றாலைகள் மூலம் தலா 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று எரிசக்தித்துறை அதிகாரிகள் கூறினர்.

காற்றாலை, சோலார்

தமிழ்நாடு மின்நுகர்வோர்களுக்கு தேவையான மின்சாரம் அனல், அணு, நீர் மின்சார நிலையம், கியாஸ் மின்சார நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. மொத்தமாக தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவை சுமார் 8 ஆயிரத்து 757 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்டவையாகும்.

இந்த நிலையில், சராசரியாக சென்னைக்கு 4 ஆயிரம் மெகாவாட் உள்பட மாநிலம் முழுவதும் 18 ஆயிரத்து 238 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அனல் மின்சார நிலையத்தில் இருந்து 3 ஆயிரம் மெகாவாட், காற்றாலை மற்றும் சோலார் மின்சார நிலையங்கள் மூலம் தலா 4 ஆயிரம் மெகாவாட், மத்திய தொகுப்பில் இருந்து 4 ஆயிரத்து 800 மெகாவாட் பெறப்படுகிறது. இந்தியாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில் சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன.

50 சதவீதம் எரிசக்தி மின்சாரம்

இதுதவிர நீர் மின்சார நிலையம், கியாஸ் மின்சார நிலையம் மற்றும் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு மின்சார நுகர்வோர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் காற்றாலை சீசன் காலங்களில் அனல் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு ஓய்வு தரப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். ஆனால் தற்போது மின்சாரத்தின் தேவை அதிகரித்து இருப்பதால் காற்றாலை மற்றும் சோலாருடன் அனல் மின்சார நிலையங்களும் சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தில் 50 சதவீதம் மின்சாரம் காற்றாலைகள் மற்றும் சோலார் மூலம் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், 2030-ம் ஆண்டிற்குள் 33 ஆயிரம் மெகாவாட்டைச் சேர்ப்பதன் மூலம் மாநிலத்தில் மின்சார உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறனை இரட்டிப்பாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின்சார உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க வேண்டும்.

பெரிய உத்வேகம்

தமிழ்நாடு இந்த ஆண்டு மின்சார பயன்பாட்டில் புதிய உச்சம் அதாவது 18 ஆயிரம் மெகா வாட்டை தொட்டு உள்ளது. வரும் ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும். இதற்கு மாநில அரசு எரிசக்தித் துறையில் பெரிய திட்டங்களைக் கொண்டுவர உள்ளது.

இதற்கு ஏற்றார்போல் தமிழ்நாடு பட்ஜெட் பசுமை எரிசக்திக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் உள்ளது என்று எரிசக்தி மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

காற்றாலை மின்சார உற்பத்தி

இதுகுறித்து இந்திய காற்றாலைகள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரிரங்கையன் கூறுகையில், 'தமிழகத்தில் கடந்த மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும் காற்றாலை சீசனில் காற்றாலைகள் மூலம் 105 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.

குறிப்பாக கடந்த 1-ந் தேதி அன்று 62 மில்லியனும், 2-ந் தேதி 60 மில்லியன் யூனிட்டும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் காற்றாலை ஆற்றல் நுகர்வு ஒரு நாளைக்கு 100 மில்லியன் யூனிட் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 8 ஆயிரத்து 757 மெகாவாட் நிறுவப்பட்ட திறனுடன், தமிழ்நாடு காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. ஆனால், 2022-2023-ம் ஆண்டில், 200 மெகாவாட் மட்டுமே கூடுதல் கொள்திறன் வந்துள்ளது' என்றார்.


Next Story