கோவையில் பதற்றத்தை தணிக்க 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு


கோவையில் பதற்றத்தை தணிக்க 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் கமாண்டோ படை உள்பட 4 ஆயிரம் போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் கமாண்டோ படை உள்பட 4 ஆயிரம் போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை நகரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு கட்சியை சேர்ந்த ஜபருல்லா என்பவரும் தாக்கப்பட்டார்.

கோவை நகரில் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்றதால் கூடுதல் டி.ஜி.பி. தாமரைகண்ணன் கோவைக்கு வருகை தந்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று காலை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

4 ஆயிரம் போலீசார் குவிப்பு

நகரில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நேற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 1,700 போலீசார் கோவையில் குவிக்கப்பட்டனர். குறிப்பாக சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர்.

இதுதவிர தமிழ்நாடு கமாண்டோ படை போலீசாரும் கோவைக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவைப்புதூர் தமிழ்நாடு பட்டாலியன்போலீஸ், வெள்ளலூர் ஆர்.ஏ.எப். போலீஸ், உள்ளூர் போலீஸ் உள்பட நகரம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உக்கடம் உள்பட முக்கிய பகுதிகளில் தீயணைப்பு படையினரும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

கோவை நகர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

வாகன சோதனை தீவிரம்

கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சுகளை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணிநேரம் வாகன சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் மற்றும் முக கவசம் அணிந்து செல்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுதவிர 15 போலீஸ்நிலைய பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெறுகிறது. சந்தேகத்துக்கிடமானவர்கள் பிடித்து விசாரிக்கப்படுகிறார்கள்.

கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறு தொடர்பாக ஒரு அமைப்பை சேர்ந்த படையப்பா, நந்தபிரகாஷ் ஆகியோர் மீதும், மற்றொரு அமைப்பை சேர்ந்த விக்னேஷ்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த புகாரில் ஜபருல்லா என்பவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரில் அமைதியை நிலைநாட்டவும், பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து கோவை வந்துள்ள போலீசார் நேற்று ரெயில்நிலையம், பஸ் நிலையம், மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள், கோவில்கள் கட்சி அலுவலகங்கள் முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். நகரம் முழுவதும் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணிகளை கண்காணித்தனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story