சென்னையில் உள்ள அமெட் பல்கலைக்கழக 4 ஆயிரம் மாணவர்கள் இன்று வீடு வீடாக கதர் ஆடை விற்பனை


சென்னையில் உள்ள அமெட் பல்கலைக்கழக 4 ஆயிரம் மாணவர்கள் இன்று வீடு வீடாக கதர் ஆடை விற்பனை
x

காந்தி பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘அமெட்’ பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் வீடுவீடாக சென்று கதர் துணிகளை விற்பனை செய்ய இருக்கின்றனர். இதற்காக ரூ.1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

போட்டி நிறைந்த சந்தை

தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்கள் பலர் காதி மற்றும் கைத்தறி துணிகளை நெய்து வருகிறார்கள். கண்ணை கவரும் வடிவமைப்புடன் தரமாகவும், விலை குறைவாகவும் துணிகளை உற்பத்தி செய்தாலும், போட்டி நிறைந்த சந்தையில் அதை விற்க சிரமப்படுகின்றனர்.

ஆனால், பிற தனியார் நிறுவனங்கள் பெரும் செலவு செய்து, கவர்ச்சிமிகு விளம்பரங்கள் மூலம் தங்களது துணிகளை வெளிச்சந்தையில் எளிதாக விற்பனை செய்து வருகின்றன. இந்தநிலையில், தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப்பணி செய்யும் நெசவாளர்களை, காந்தி பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கை தூக்கிவிட, சென்னையில் உள்ள 'அமெட்' பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்தது.

4 ஆயிரம் மாணவர்கள் விற்பனை

அதன் அடிப்படையில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 ஆயிரம் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று காதி மற்றும் கைத்தறி துணிகள் மற்றும் கிராமப்பொருட்களை விற்பனை செய்ய இருக்கின்றனர்.

இந்த சமூக சேவை திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இன்று காலை 6.30 மணிக்கு 'அமெட்' பல்கலைக்கழக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் நாசே ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், 'அமெட்' பல்கலைக்கழக துணை வேந்தர் க.திருவாசகம், கைத்தறித் துறை ஆணையர் டி.பி.ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் பொ.சங்கர், அமெட் பல்கலைக்கழக பதிவாளர் ஜெயபிரகாஷ் வேல், அமெட் பல்கலைக்கழக முதல்வர் என்.ஆர்.ராம்குமார் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

வீடுவீடாக சென்று காதி மற்றும் கைத்தறி பொருட்களை விற்பனை செய்யும் 4 ஆயிரம் 'அமெட்' பல்கலைக்கழக மாணவர்களும் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும், 'அமெட்' பல்கலைக்கழகம் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 59 பல்கலைக்கழகங்கள் மற்றும் 2,140 கல்லூரிகளில் படிக்கும் 17 லட்சத்து 42 ஆயிரம் மாணவர்களை கொண்டும் காதி மற்றும் கைத்தறி பொருட்களை விற்பனை செய்வது எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Next Story