ஜமாபந்தியில் 409 மனுக்கள் பெறப்பட்டன
பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 409 மனுக்கள் பெறப்பட்டன. நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் வழங்கினார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 409 மனுக்கள் பெறப்பட்டன. நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் வழங்கினார்.
75 மனுக்களுக்கு தீர்வு
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கடந்த 23-ந்தேதி ஜமாபந்தி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. சப்-கலெக்டரும், ஜமாபந்தி அதிகாரியுமான பிரியங்கா பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். ராமபட்டிணம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, பெரிய நெகமம், கோலார்பட்டி உள்வட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர்.
ஜமாபந்தியில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் பெறப்பட்ட 409 மனுக்களில் 75 மனுக்களுக்கு ஜமாபந்தியில் தீர்வு காணப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
இந்த நிலையில் ஜமாபந்தி கடைசி நாளான நேற்று தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு ஆணைகள் மற்றும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. சப்-கலெக்டர் பிரியங்கா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 10 நரிக்குறவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் பட்டா மாறுதல், நத்தம் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது உதவி கலெக்டர் சவுமியா, தாசில்தார் வைரமுத்து, தனி தாசில்தார்கள் வெங்கடாச்சலம், சங்கீதா, பானுமதி, மண்டல துணை தாசில்தார்கள் பட்டுராஜ், செந்தில்குமார், சுப்ரியா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர். ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.