410 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை


410 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறைகேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட 410 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 410 மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் எடையாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரிந்த தொழுதூர் ரேஷன்கடை விற்பனையாளருக்கு முதல் பரிசும், ஸ்ரீமுஷ்ணம் கடை விற்பனையாளருக்கு இரண்டாம் பரிசும், குறிஞ்சிப்பாடி ரேஷன்கடை எடையாளருக்கு முதல் பரிசும், வேப்பூர் கடை எடையாளருக்கு இரண்டாம் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விழுப்புரம் கோட்டத்தின் மூலம் கடலூர் பனங்காட்டு பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 240 வீடுகளில் பயனாளி பங்களிப்பு தொகை முழுவதும் செலுத்திய 9 பேருக்கு வீடுகளுக்கான ஒதுக்கீடு ஆணையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் கற்பகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story