மருத்துவ துறையில் 4,318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


மருத்துவ துறையில் 4,318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஈரோடு

தமிழக மருத்துவ துறையில் 4,318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

ஹீமோகுளோபிேனாபதி

வளர்இளம் பருவத்தினருக்கான ஹீமோகுளோபிேனாபதி நோயை கண்டறியும் பரிசோதனை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அதன் தொடக்க விழா ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்தில் ஜூலை 19-ந் தேதி தொடங்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த திட்டம் தொடக்க விழா ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஒசூர் கிராமத்தில் நடைபெற்றது.

விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஹீமோகுளோபிேனாபதி நோய் கண்டறியும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையொட்டி வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உப்பு கரைசல் பவுடர் வழங்கப்பட்டது. பின்னர் தாளவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழுநோயாளிகளை கண்டறியும் முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.

தலா ரூ.14 லட்சம்

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதிநிலை அறிக்கையில் மருத்துவ துறை சார்பில் 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இந்த 136 அறிவிப்புகளும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி மக்கள் நல்வாழ்வு துறையின் அனைத்து அறிவிப்புகளும் அடுத்த நிதிநிலை அறிவிப்புக்குள் நிறைவேற்றப்படும். அந்த வகையில் மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று தாளவாடி பகுதியில் இருக்கும் ஓசூர் கிராமத்தில், குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் பழனி, ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கன்னியாகுமரி மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட 12 பழங்குடியினர் வசிக்கும் வட்டாரத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிந்து அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான திட்டம் ரூ.14 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விழிப்புணர்வு

அதன்படி இந்த திட்டத்தை தாளவாடி கிராமத்தில் தொடங்கி வைத்திருக்கிறோம். வீடுகள் தோறும் தேடிச்சென்று வளர் இளம் பெண்களுக்கும், கருவுற்ற தாய்மார்களுக்கும் இந்த பரிசோதனைகள் செய்யப்படும். ரத்த சோகை பாதிப்பு மலைக்கிராம மக்கள் இடையே பரவி வரும் சூழ்நிலையில் இதை தடுப்பதற்கும் இந்த நோயின் தன்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.

பொதுவாக ஆண், பெண் என 2 பேருக்கும் இந்த நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்த நோய் பாதிப்பு இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. எனவே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

பிரேத பரிசோதனை

5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஓ.ஆர்.எஸ் என்ற கரைசல் மருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தரப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தாளவாடி மருத்துவமனையில் பெரிய அளவு வசதிகள் இல்லை எனவும், இங்கு பிரேத பரிசோதனை செய்யும் வசதி இல்லை எனவும் மலைவாழ் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இறப்பு ஏற்பட்டால் அவர்களை கர்நாடகத்திற்கும் அல்லது சத்தியமங்கலம் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெரிய அளவில் சட்ட சிக்கல் கூட ஏற்படும்.

எனவே பிரேத பரிசோதனை கூடம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி தாளவாடி பகுதிக்கு பிரேத பரிசோதனை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தாளவாடி ஆஸ்பத்திரியில் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அது குறித்தும் சென்னைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

புன்னகை திட்டம்

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் திட்டம், தொலைதூர மருத்துவ சேவை, 2025-க்குள் காச நோய் இல்லாத தமிழகம் இப்படி பல திட்டங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தொழு நோய் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர புன்னகை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மலைக்கிராமத்தில் படித்த பெண் ஒருவருக்கு கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்து, அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தப் பெண்ணின் மூலம் வழங்கும் வகையில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை 45 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த 45 மலைக்கிராமங்களிலும் புன்னகை திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அந்தந்த மலைக்கிராமங்களுக்கு இணையதள வசதி, படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அந்த இளைஞர் மருத்துவர்களோடு பேசி அந்தந்த மலைக்கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடியும். இதுகுறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நிதி ஆதாரம் பெறப்படும்.

4,318 காலிப்பணியிடங்கள்

கரு முட்டை தானம் என்பது சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 21 வயது முதல் 35 வயதுக்குள் பெற்றெடுக்கிற தாயின் கரு முட்டை கொடுக்கிற வகையில் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் 6 மருத்துவமனைகள் தொடர்ச்சியாக கரு முட்டை எடுத்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 4 மருத்துவமனைகள் மற்ற 2 மருத்துவமனைகள் ஆந்திரா, கேரளாவில் உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனைகள் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் போலி மருந்து, தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்துறையில் உள்ள 4 ஆயிரத்து 318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், ஒன்றிய செயலாளர் சிவண்ணா, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்


Next Story