கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற 44 பேர் கைது


கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற 44 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 44 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்


மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 44 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்யுத்த வீராங்கனைகள்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்யக்கோரி கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு அமைப்பு மற்றும் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் கோவையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரெயில் மறியல் முயற்சி

இதையடுத்து நேற்று காலையில் கோவை ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 11 மணியளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜூன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்கண்ணன், செயலாளர் அசாருதீன் மற்றும் நிர்வாகிகள் பலர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கோவை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார், அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.

44 பேர் கைது

ஆனால் அவர்களை போலீசார் தடுத்ததால், போராட்டக்காரர்கள் அங்கு அமர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள்.

ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தினேஷ்ராஜா, ராஜா உள்ளிட்ட 44 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அதுபோன்று ஐக்கிய முன்னணி விவசாய கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் கோவை தபால் நிலையம் முன்பு மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.ஆர்.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் மக்கள் அதிகாரம் மூர்த்தி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க ஆறுசாமி மற்றும் விவசாயிகள் வி.கே.பழனிசாமி, பூலுவப்பட்டி ஈஸ்வரன், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story