440 விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்-மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


440 விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்-மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் இணைப்புக்காக தயார்நிலை பதிவேட்டில் பதிவுசெய்து காத்திருக்கும் 440 விவசாயிகளுக்கு உடனே மின்இணைப்பு வழங்க வேண்டும் என்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கினார். கோட்ட செயற்பொறியாளர் (பொது) சேகர், பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

புதிதாக ஒருமுனை மின் இணைப்பு மற்றும் மும்முனை மின்சார இணைப்பு பெறுவதற்காக மின்நுகர்வோர்களிடம் இருந்து வாங்கும் தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த தொகையை குறைக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.

புதிய மின் இணைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் இணைப்புக்காக தயார்நிலை பதிவேட்டில் பதிவு செய்து 440 விவசாயிகள் புதிய மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அந்தந்த கோட்ட மின்பொறியாளர் அலுவலகங்களில் தயார்நிலை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு இலக்கீடு நிர்ணயம் செய்து புதிய மின்இணைப்பு கிடைத்திட தமிழக அரசும், மின்வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை இடர்பாடு காரணமாக இடி-மின்னல் தாக்குவதால், மின்சார மீட்டர் எரிந்தால், முன்பு வழக்கத்தில் இருந்ததை போல் எவ்வித கட்டணமும் வசூல் செய்யாமல் மின்வாரியத்தினர் மின்சார மீட்டரை மாற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மின்மாற்றியில் பழுதுகள்...

மின்நுகர்வோர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த மின்வட்ட மேற்பார்வை பொறியாளர், கோடைகாலமாக உள்ளதால், மின்பயன்பாடு அதிகம் தேவையிருக்கும். ஆங்காங்கே மின்மாற்றியில் பழுதுகள் ஏற்பட்டால், அதுகுறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால், உடனுக்குடன் சரிசெய்யப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கவும் மின்வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்செல்வன் (டவுன்), செல்வராஜ் (கிராமியம்) மற்றும் பொறியாளர்கள், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ராஜாசிதம்பரம் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், மின்நுகர்வோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story