4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்


4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்
x

முறைகேடுகளை தடுக்கும் வகையில், 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் பேசினார்.

திண்டுக்கல்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பயிற்சி புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசும்போது, 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் செம்பட்டி அருகே கூட்டுறவுத்துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலை அடுத்த மன்னவனூரில் தேசிய அளவில் கூட்டுறவு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கூட்டுறவுத்துறையில் 22 கல்வி பயிற்சி நிறுவனங்கள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 2 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர்க்கடன் வழங்குவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காந்தி கிராம கிராமியப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முரளிதரன், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் தமிழ்மொழிஅமுது ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story