மாமல்லபுரத்தில் 45 அடி உயரத்தில் சிற்பக்கலை தூண்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலை தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
செங்கல்பட்டு,
மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் அமைக்கப்பட்ட 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.
பூம்புகார் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தமிழக கைவினைக் கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த செயல்பட்டு வருகிறது. மாமல்லபுரத்திற்கு, வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், கைவினைக் கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரூ. 5.61 கோடி மதிப்பில் கைவினை சுற்றுலா கிராமம் எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தில், முதல் கட்டமாக ரூ. 1.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்துரதம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கடைகளை அழகுபடுத்துதல், மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில் வசிக்கும் 28-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், மழை நீர் செல்லும் கால்வாய், மின்விளக்கு, அலங்கார வளைவு, மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில் அருகே 45 அடி உயர சிற்பக்கலைத் தூண் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில், ஒரு சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் 45 அடி உயரம் கொண்ட சிற்பக்கலைத் தூண் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த, சிற்பக்கலைத் தூண் நான்கு நிலைகளை கொண்டுள்ளது. தரையில், இருந்து முதல் நிலையில் 4 பெரிய யானைகள், 4 சிறிய யானைகள், இரண்டாம் நிலையில் 4 மயில்கள், மூன்றாவது நிலையில் 4 யாழி, 4 பெரிய யானைகள், 4 சிறிய யானைகள், நான்காம் நிலையில் 4 பெரிய சிங்கங்கள் என வெளிநாட்டினரை கவரும் வண்ணம், ஒரு கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட் - செரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மாமல்லபுரத்திற்கு வருகை தருகின்றனர்.
இதனால், பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொண்டு, மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும், இங்கு வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த சிற்பக்கலைத் தூணை இன்று மாலை திறந்து வைக்கிறார்.