செயற்கை வண்ணம் கலந்த 45 கிலோ சிக்கன் பறிமுதல்


செயற்கை வண்ணம் கலந்த 45 கிலோ சிக்கன் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

கடலூர் பஸ்நிலைய ஓட்டல்களில் செயற்கை வண்ணம் கலந்த 45 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்திரசேகரன், நல்லதம்பி, சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மதியம் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 ஓட்டல்களில் நேற்று முன்தினம் சமைத்த கோழி இறைச்சிகளில், மீதமிருந்த 5 கிலோ இறைச்சி மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் செயற்கை நிறமூட்டி கலந்து சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த 3 கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது மக்களுக்கு ஆரோக்கியமான, செயற்கை வண்ணங்கள் இல்லாத உணவு வகைகளை தயாரித்து வழங்க வேண்டும் எனவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்தார். இதேபோல் செம்மண்டலத்தில் உள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


Next Story