தொழில் அதிபர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை


தொழில் அதிபர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை
x

புதுக்கோட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை மச்சுவாடி சீனிவாச நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அசைன் (வயது 42). இவர் இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அசைன் அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தது. மேலும் பீரோவில் இருந்து நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டிச்சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கணேஷ்நகர் போலீசாருக்கு அசைன் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் பீரோவில் இருந்த 45 பவுன் நகைகளையும், ரூ.30 ஆயிரத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக அசைன் தெரிவித்தார்.

என்னென்ன நகைகள் கொள்ளை போனது என அவரிடம் போலீசார் கேட்டுள்ளனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story