ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,500 ஊழியர் பணியிடங்கள் டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும்
ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,500 ஊழியர் பணியிடங்கள் டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.4 ஆயிரம் கோடி பயிர்க்கடன்
கூட்டத்துக்கு பின் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு 10 ஆயிரத்து 292 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக பயிர்க்கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இதுவரை பயிர்க்கடனாக ரூ.4 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
நகைக்கடனை பொறுத்தமட்டில் மொத்தம் ரூ.4,900 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ரூ.100 கோடி மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டி உள்ளது. இதனை துரிதமாக வழங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
கிராமப்புற ஏழைகளுக்கு கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை பன்முகத்தன்மையுடன் செயல்படும் வகையில் மாற்றி வருகிறோம்.
இதுவரை 400 வங்கிகளை மாற்றி உள்ளோம். மீதமுள்ள 1,500 வங்கிகள் விரைவில் மாற்றப்படும். கிராமப்புற பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்க வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரூ.600 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றிணைத்து செயல்படுத்தும் வகையிலான கோர் பாங்கிங் வசதியை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வங்கியில் கூகுல்பே, பேடிஎம். போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.
காலி பணியிடங்கள்
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 500 விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
வெளிப்படைத்தன்மையுடன் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதியானவர்கள் இந்த பணியிடங்களில் நியமிக்கப்படுவர். எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்படாது.
சென்னை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் வசிக்கும் ஏழைகள், வெளிமாநில தொழிலாளர்கள் பலர் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் கியாஸ் இணைப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற கூட்டுறவு சங்கத்தின் மூலம் 2 மற்றும் 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
பாரபட்சமின்றி நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்தது. விவசாய கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதை தடுக்கவும், தகுதியான விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்யவும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.