நீலகிரி மாவட்டத்தில் 456 பாதுகாப்பு மையங்கள் தயார்:வீடுகளின் அருகே ஆபத்தான மரங்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை-கலெக்டர் அம்ரித் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் 456 பாதுகாப்பு மையங்கள் தயார்:வீடுகளின் அருகே ஆபத்தான மரங்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 7 July 2023 6:45 AM IST (Updated: 7 July 2023 6:45 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை எதிர்கொள்வதற்கு 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், வீடுகளின் அருகே ஆபத்தான மரங்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் கூறினார்.

நீலகிரி

பந்தலூர்

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை எதிர்கொள்வதற்கு 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், வீடுகளின் அருகே ஆபத்தான மரங்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கூடலூர், பந்தலூரில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர் அம்ரீத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. ஆனால் இதுவரையில் பெரிய அளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து

கணக்கெடுக்கப்பட்டது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. 2 இடங்களில் பகுதி அளவில் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஜூன் மாதம் முதல் இதுவரை 16 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளது. அதேபோல் கடந்த மாதம் முதல் இதுவரை 28 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. பாதிப்புகளும் மிக குறைந்த அளவில்

ஏற்பட்டுள்ளது. இதுவரை முகாம்களில் பொதுமக்களை தங்க வைக்கும் அளவிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

இருப்பினும் தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் 283 இடங்கள் அதிக பாதிப்புகள் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரிடர்களினால் மரம் சாலைகளில் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த தேவையான பவர்ஷா உள்ளிட்ட எந்திரங்களும், ஜேசிபி ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் நிவாரண பணி

அபாயகரமான மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 - 2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட எளிதாக இருக்கும். அதேபோல் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 கோட்டத்திலும், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களிலும் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

அபாயகரமான மரங்களை அகற்ற....

மேலும் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வருவாய் கோட்டாட்சிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மழை காலத்திற்கு முன்பாகவே ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 கோட்டங்களிலும் 200-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி ஏதேனும் அபாகரமான மரங்கள் இருக்கும் பட்சத்தில் வருவாய்த்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூடலூர் ஆர்.டி.ஓ. முகமதுகுதரத்துல்லா, பந்தலூர் தாசில்தார் கிருஸ்ணமூர்த்தி, ஆணையாளர் (பொறுப்பு) பிரான்சீஸ்சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் செய்து முகமது, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சரண் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story