ரூ.46¾ கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ரூ.46¾ கோடியில் நடைபெறும் பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தாழையாத்தம் முதல் சேம்பள்ளி கூட்ரோடு வரை ரூ.30 கோடியே 19 லட்சத்தில் நீர்வளத்துறை சார்பில் சாலை வசதியும், ரூ.13 கோடியே 70 லட்சத்தில் கெங்கையம்மன் கோவில் அருகே நீர் வழிப்போக்கிகளுடன் கூடிய தரைப்பாலமும், ரூ.2 கோடியே 91 லட்சத்தில் இடது கரை பகுதியில் நடை பாதையும் என மொத்தம் ரூ.46 கோடியே 80 லட்சம் மதிப்பில் சில நாட்களுக்கு முன்பு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் செய்யப்பட உள்ள பணிகள் குறித்து நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் கே.அசோகன் தலைமையிலான பொறியாளர் குழுவினர் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் இப்பணிகள் செயல்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது நீர்வளத் துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ், உதவி கோட்ட செயற்பொறியாளர் பி.கோபி, உதவி பொறியாளர் ஆர்.ராஜேஷ், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் எம்.எஸ்.அமர்நாத் ஆகியோர் உடன் இருந்தனர்.