சிவில் சர்வீசஸ் தேர்வை 4,602 பேர் எழுதினர்


சிவில் சர்வீசஸ் தேர்வை 4,602 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 29 May 2023 1:00 AM IST (Updated: 29 May 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று 18 மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 4,602 பேர் எழுதினர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நேற்று 18 மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 4,602 பேர் எழுதினர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப்பணி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு எழுத கோவை மாவட்டத்தில் மட்டும் 7,742 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 18 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

நுழைவு சீட்டு விவரங்கள்

இதையடுத்து நேற்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை முதல்நிலை தேர்வும், மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை முதன்மை தேர்வும் நடைபெற்றது.

இதனால் நேற்று காலை 7 மணி முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகளுக்கு சென்றனர்.

நுழைவு சீட்டு விவரங்களை சரிபார்த்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகள் நடப்பதை தடுக்க தேர்வு மையங்களில் செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.

கண்காணிப்பு பணி

கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் அறை கண்காணிப்பாளர்கள் உள்பட 700 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் கிராந்தி குமார் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற தேர்வை கோவை மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் பார்வையிட்டு, தேர்வர்கள் பதற்றம் இன்றி தேர்வு எழுத உரிய ஆலோசனை வழங்கினார்.கோவையில் முதல்நிலை தேர்வை 4,602 பேர் எழுதினர். 3,140 பேர் எழுத வரவில்லை. முதன்மை தேர்வை 4,564 பேர் எழுதினர். 3,177 பேர் எழுத வரவில்லை.


Next Story