தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகள் முடித்து வைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சிக்கு மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து அவர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.
இதில் அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் முதன்மை சட்ட ஆலோசனை வழக்கறிஞர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
47 வழக்குகள் முடித்து வைப்பு
இதில் அரசால் நிலம் கையப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு சார்ந்த வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன், கல்வி கடன் பெற்ற வாராக்கடன் வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 628 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 47 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 62 ஆயிரத்து 70 சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.