குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வை 4,705 பேர் எழுதினர்

கோவையில் 24 மையங்களில் நடந்த குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வை 4,705 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
கோவை
கோவையில் 24 மையங்களில் நடந்த குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வை 4,705 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நிலை தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை ஏராளமானோர் எழுதினார்கள்.
கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 9 ஆயிரத்து 447 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு 24 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
இதற்காக இந்த தேர்வு மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு 12.30 மணிக்கு முடிவடைந்தது.
தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய தேர்வு 5.30 மணிக்கு முடிந்தது. இந்த தேர்வு மையங்களுக்கு செல்ல கோவை காந்திபுரம், உக்கடம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் வசதி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
4,705 பேர் எழுதினர்
காலை 9.20 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும் என்பதால் காலை 8.30 மணிக்கே தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்கள் குவிந்தனர்.
அவர்கள் செல்போன், டிஜிட்டல் கைக்கெடிகாரம் உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் வைத்து உள்ளனரா என்பது குறித்து தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதுபோன்று தேர்வு எழுத வந்தவர்கள் நுழைவு சீட்டு வைத்து உள்ளனரா என்று சரிபார்த்த பின்னரே அனுமதித்தனர். அதுபோன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய தேர்வுக்கு 1.30 மணிக்கு எல்லாமல் அங்கு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் குவிந்து இருந்தனர்.
2.20 மணிக்கு பின்னர் வந்தவர்கள் யாரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை மொத்தம் 4 ஆயிரத்து 705 பேர் எழுதினார்கள். 4 ஆயிரத்து 741 பேர் எழுத வரவில்லை.
கலெக்டர் ஆய்வு
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த இந்த தேர்வை கலெக்டர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு இருந்த கண்காணிப்பாளர்களிடம், தேர்வு எழுத வந்தவர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
மேலும் இந்த தேர்வை கண்காணிக்க 8 துணை கலெக்டர்கள், 24 தாசில்தார்கள், 40 துணை தாசில்தார்கள், 414 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.






