தஞ்சை பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்


தஞ்சை பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
x

மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம் நடந்தது. திருமுறை தேவார பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1037-வது சதய விழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் தொடங்கியது.

கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை

நேற்று 2-வது நாள் நிகழ்ச்சியையொட்டி காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது சிவ பூத இசை வாத்தியங்களை இசைத்தபடி சிவனடியார்கள் வந்தனர்.

சிலைக்கு மாலை அணிவிப்பு

ஊர்வலம், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையை அடைந்ததும் அங்கு சிலைக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக குஜராத்தில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன்-லோகமாதேவி சிலைகள் முன்பு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்தனர். அப்போது ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைக்கு ராஜா, ராணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

48 வகையான அபிஷேகம்

அதன்பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியபொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 48 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் பெருவுடையார்-பெரிய நாயகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது.

ஆன்மிக அரசு

முன்னதாக விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பதை நான் வரவேற்கிறேன். நான் ஏற்கனவே கூறியபடி இந்த அரசு, ஆன்மிக அரசாக திகழ்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார்.


Next Story