பிளஸ்-2 தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கை -அமைச்சர் தகவல்


பிளஸ்-2 தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கை -அமைச்சர் தகவல்
x

பிளஸ்-2 தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி கூறினார்.

சென்னை,

பிளஸ்-2 தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது தொடர்பாக சட்டசபையில் உறுப்பினர்கள் செங்கோட்டையன் (அ.தி.மு.க.), பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்) மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து பேசியதாவது:-

'ஆல் பாஸ்' போடப்பட்டவர்கள்

2020-2021-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குப் பதிவு செய்த அனைத்து மாணவர்களும் கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இன்றைக்கு பொதுத்தேர்வு எழுதுகின்ற 12-ம் வகுப்பைச் சார்ந்த மாணவர்கள், 'ஆல் பாஸ்' போடப்பட்டவர்கள்.

2021-2022-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குப் பதிவு செய்த 8,85,051 மாணவர்களில் 41,366 மாணவர்கள் வரவில்லை. 83,811 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. 7,59,874 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களும், வராதவர்களும் 1,25,177 மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுள் 11-ம் வகுப்பைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் முந்தைய ஆண்டு பள்ளி செல்லா மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முன்னெடுப்புகள் மூலம் பல்வேறு வகுப்புகளுக்கு மீண்டும் சேர்க்கப்பட்ட 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்களில் உள்ளடங்குவார்கள்.

தேர்வு எழுத நடவடிக்கை

1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களில் 78 ஆயிரம் மாணவர்களை நாங்கள் இன்றைக்கு தேர்வு எழுத வைத்திருக்கிறோம். இதை அப்படியே விட்டுவிட்டிருந்தோம் என்றால் அந்த 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்களும் இன்றைக்கு பள்ளிக்கே வராமல் போயிருப்பார்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்கள் 8,36,593. அதில் மொழிப்பாடத் தேர்வுக்கு வராதவர்கள் 47,943. தேர்வுக்கு வராத மாணவர்களை துணைத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று ஆர்வமூட்டி, உயர்கல்விக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் போன்ற செயல்பாடுகளால் பொதுத்தேர்வுக்கு வராதவர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ள 1.25 லட்சம் மாணவர்களிலிருந்து 78 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்.

ஆலோசனைகள்

வரும் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும்போது குறைந்தபட்ச வருகைப்பதிவை 75 சதவீதம் பின்பற்ற வேண்டும். துணைத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்க சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்து பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் பகிரப்படும். அந்த உறுப்பினர்கள், பட்டியலில் உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள துணைத்தேர்வுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

அனுப்பிவையுங்கள்

ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், அந்த மாணவர்களின் விவரப்பட்டியல் தலைமையாசிரியருக்கு அனுப்பப்படும். தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். 4 வாரத்துக்குப் பிறகும் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளவர்கள் என கருதி தலைமையாசிரியர் பொதுத்தரவு தளப் பட்டியலில் அம்மாணவர்களை காரணத்தைக் குறிப்பிட்டு சேர்க்கப்படுவர்.

பெற்றோருக்கு வைக்கின்ற வேண்டுகோள், ஆசிரியர்கள் உங்கள் வீடு தேடி வந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பச் சொன்னால், தயவுசெய்து அவர்களிடம் கோபித்துக்கொள்ளாதீர்கள். இந்தப் பிள்ளைகள் இந்த வயதில் பணம் சம்பாதித்து ஒழுங்கீனமாகிவிட்டால், அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவது மிகவும் சிரமமாக இருக்கும்.

மாணவர்களுக்காகத்தான் 'நான் முதல்வன்' திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தயவு செய்து பிள்ளைகளை நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வையுங்கள். அவர்களைப் பார்த்துக்கொள்வது, எங்கள் அனைவருடைய பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story