3 நாட்களில் 48,687 பேர் விண்ணப்பித்தனர்


3 நாட்களில் 48,687 பேர் விண்ணப்பித்தனர்
x
தினத்தந்தி 21 Aug 2023 7:00 PM GMT (Updated: 21 Aug 2023 7:00 PM GMT)

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு பதிவு செய்ய கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 48,687 பேர் விண்ணப்பித்தனர்.

கோயம்புத்தூர்

கோவை, ஆக.22-

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு பதிவு செய்ய கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 48,687 பேர் விண்ணப்பித்தனர்.

மகளிர் உரிமைத்தொகை

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று விண்ணப்ப படிவம் மற்றும் கூட்ட நெரிசலை குறைக்க டோக்கன் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெற்று இந்த திட்டத்துக்கென வடிவமைத்துள்ள செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு மற்றும் வடக்கு, ஆனைமலை, அன்னூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, மேட்டுப் பாளையம், பேரூர், பொள்ளாச்சி, சூலூர், வால்பாறை ஆகிய தாலுகாக்களில் இந்த திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய 2 கட்டங்களாக முகாம் அமைக்கப்பட்டு விண்ணப்ப பதிவு நடை பெற்றது. 2 கட்டங்களாக நடந்த முகாம்களிலும் மொத்தம் 6 லட்சத்து 93 ஆயிரத்து 112 பெண்கள் விண்ணப்பம் கொடுத்தனர்.

சிறப்பு முகாம்

இந்தநிலையில் வருவாய் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே நடந்த முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்க ளுக்கு கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பங்கள்

அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

அதில் தாலுகா வாரியாக ஆனைமலை- 2,808, அன்னூர்-1,737, கோவை வடக்கு-13,483, கோவை தெற்கு-7,273, கிணத்துக்கடவு-1,067, மதுக்கரை-5,207, மேட்டுப்பாளையம்-4,100, பேரூர்-5,312, பொள்ளாச்சி-3,499, சூலூர்-3,732, வால்பாறை-469 என சிறப்பு முகாமில் மட்டும் ஒட்டுமொத்தமாக 48 ஆயிரத்து 687 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

48,687 பேர் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 ரேஷன்கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு 1,401 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2 கட்டங்களாக நடந்த முகாம்களின் மூலம் 6 லட்சத்து 93 ஆயிரத்து 112 பேர், 3 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் 48,687 பேர் என மொத்தமாக 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story