சிங்கம்புணரியில் 49 விநாயகர் சிலைகள் கரைப்பு
சிங்கம்புணரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 49 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 49 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
சிங்கம்புணரி பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிங்கம்புணரி நகர் பகுதிகளில் மொத்தம் 49 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டன.
இதையடுத்து நேற்று முன்தினம் இந்த சிலைகள் ஊர்வலம் சிங்கம்புணரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள சீரணி அரங்கில் இருந்து புறப்பட்டது.
முன்னதாக இந்து சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார். அய்யப்ப குருசாமிகள் வேதாச்சலம், தவமணி, ராமதாஸ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக சொற்பொழிவாளர் பாரதி, பா.ஜ.க. மாநில செயலாளர் பாண்டியராஜன் சொற்பொழிவாற்றினர்.
தெப்பக்குளத்தில் கரைப்பு
தொடர்ந்து வெள்ளாளர் நல சங்க தலைவர் வீரபாண்டியன் ராஜமாணிக்கம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் முன்புள்ள தெப்பக்குளத்தில் விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டன. இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விழா குழு தலைவர் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் பொன்னையா, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் கண்ணையா, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி, இந்து முன்னணி ஒன்றிய பொது செயலாளர் விஜய், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட துணை தலைவர் குகன், கோட்ட இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.