அரசு பள்ளி மாணவர்கள் 49 பேர் இன்று கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு


அரசு பள்ளி மாணவர்கள் 49 பேர் இன்று கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு
x

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 49 பேர் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது.

புதுக்கோட்டை

அரசு பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடா்ந்து இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்காக "நீட்" தேர்வில் 285 மதிப்பெண்கள் முதல் 720 மதிப்பெண்கள் வரை எடுத்த அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 1,368 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 49 பேருக்கு அழைப்பு வந்துள்ளது. இவர்கள் "நீட்" தேர்வில் 285 முதல் 420 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் போது எத்தனை பேருக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்று மாலை தெரியும்.

கீரமங்கலம்

கலந்தாய்வில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேரும், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவரும் கலந்து கொள்கின்றனர். கீரமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் கடந்த 3 ஆண்டுகளில் 12 பேர் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story