குமரி மாவட்ட அளவிலான 4, 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


குமரி மாவட்ட அளவிலான 4, 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
x

குமரி மாவட்ட அளவிலான 4, 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நேற்று தொடங்கியது. இதனை முதன்மைக்கல்வி அதிகாரி முருகன் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட அளவிலான 4, 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நேற்று தொடங்கியது. இதனை முதன்மைக்கல்வி அதிகாரி முருகன் தொடங்கி வைத்தார்.

எண்ணும்-எழுத்தும் பயிற்சி

2023- 2024-ம் கல்வி ஆண்டில் 4, 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின்கீழ் பாடம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை பள்ளி அளவில் மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் 873 ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வட்டார அளவில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை வழங்கப்படஉள்ளது.

இந்த பயிற்சியினை வட்டார அளவில் வழங்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பயிற்சி நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷ்னல் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் 126 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி நாளை (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் பாடவாரியாக நடக்கிறது. பயிற்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி முருகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உயிரோட்டமாக...

2025-ம் ஆண்டிற்குள் எட்டு வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் தங்கு தடையின்றிப் படிக்கவும், எழுதவும், கணக்குகளைச் செய்யவும் அறிந்திருக்க வேண்டும். இதை இலக்காகக் கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்புகள் வரையில் 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரே வகுப்பில் பல்வேறு கற்றல் நிலையிலுள்ள குழந்தைகள் இருப்பார்கள். இந்த சூழ்நிலையை கையாளவும், கற்றல் இடைவெளியை குறைக்கவும் குழந்தைகளின் வகுப்பு நிலையை (கிரேடு லெவல்) அடிப்படையாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் முறைக்கு மாற்றாக கற்றல் நிலையை (லேர்னிங் லெவல்) அடிப்படையாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் முறையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மிகவும் எளிதான முறையில் கற்பிக்கப்படுகிறது.

1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் செயல்முறைகளின் அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீடு, மொழி, கணக்கு ஆகியவற்றோடு சூழ்நிலையியலை ஒருங்கிணைத்து கற்பித்தல் நடைபெறுகிறது. தற்போது வகுப்பறை என்பது நிகழ்த்துக் கலைகளின் பட்டறையாக, தனித்திறன்களின் வெளிப்பாட்டு மேடையாக, இசை அரங்கமாக, கதைக்களமாக, விளையாட்டுக்கூடமாக, கலைகளின் செயல்களமாக, ஓவியக்கூடமாக என உருமாற்றம் பெற்று உயிரோட்டமாக திகழ்கிறது.

களஞ்சியம்

கடந்த 2 ஆண்டுகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் நிலைவாரியான கற்றல் அணுகுமுறையானது கற்றல் இடைவெளியைக் குறைக்க பெருமளவில் உதவியது. எனவே இந்த நிலைவாரியான கற்றல் அணுகுமுறையை 4, 5-ம் வகுப்புகளுக்கு நீட்டிக்க வேண்டிய தேவையுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு தொடர்ந்து மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் அனுபவங்களை வழங்கிட எண்ணும் எழுத்தும் திட்டம் 2023-24-ம் கல்வி ஆண்டில் இருந்து 4, 5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இதன்படி குழந்தைகளின் பன்முகத்திறன்களை வளர்ப்பதற்கான களமாக வகுப்பறைகள் அமைய வேண்டுமெனவும், குழந்தைகள் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கற்றுக்கொள்ளவும் மொழித்திறன்களை வளர்ப்பதற்கும் படைப்பாற்றல் களஞ்சியம், கணக்குகளை உருவாக்கி தீர்வு காணவும், கணித சிந்தனையை தூண்டி வெளிப்படுத்தவும் செயல்பாட்டு களஞ்சியம், சிறுசிறு சோதனைகளைச் செய்து பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்க்க அறிவியல் களஞ்சியம், வரலாற்று உண்மைகளை அறியவும், சமூக சிந்தனையை வளர்ப்பதற்கு வரலாற்றுக் களஞ்சியம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான பயிற்சியாளர்கள்

இந்த பயிற்சியை மாநில அளவில் பயிற்சி பெற்ற தேரூரில் உள்ள மாவட்ட கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்க உள்ளனர். முதல் நாளான நேற்று கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவித் திட்ட அதிகாரி துரைராஜ், ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story