1½ ஆண்டுகளில் 4-வது முறையாக ஏற்றம்: ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.80 உயர்வு


1½ ஆண்டுகளில் 4-வது முறையாக ஏற்றம்: ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.80 உயர்வு
x

கடந்த 1½ ஆண்டுகளில் 4-வது முறையாக ஆவின் நெய் விலை உயர்ந்துள்ளது. தற்போது லிட்டருக்கு ரூ.80 வரை அதிகரித்து இருப்பதன் மூலம், தனியார் நிறுவனத்துக்கு நிகராக விற்பனை ஆகிறது.

சென்னை,

ஆவின் பால் பொருட்களின் விலை கடந்த 2 ஆண்டுகளாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் வெண்ணெய் விலை 2 முறையும், பனீர் விலை 2 முறையும், ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்ற பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த வரிசையில் ஆவின் நெய் விலை, கடந்த ஆண்டில் இருந்து விலை உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு (2022) மார்ச் மாதம் லிட்டருக்கு ரூ.25-ம், அதனைத்தொடர்ந்து ஜூலை மாதம் லிட்டருக்கு ரூ.45-ம் உயர்த்தப்பட்டது.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதாவது அந்த 9 மாதங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.115 உயர்த்தப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ.630-க்கும், ஒரு லிட்டர் பாக்கெட் நெய் ரூ.620-க்கும் விற்பனை ஆனது.

லிட்டருக்கு ரூ.80 வரை உயர்வு

இந்த நிலையில் ஆவின் நெய் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்த சுற்றறிக்கையில் தெரிவித்து இருந்தது.

அதன்படி, இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் சாதாரண ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 வரையும், பிரீமியம் நெய் லிட்டருக்கு ரூ.80 வரையும் உயர்ந்துள்ளது. கடந்த 1½ ஆண்டுகளில் 4-வது முறையாக ஆவின் நெய் விலை ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை மட்டும் ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.185 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆவின் நெய் என்பது மராட்டியம், ராஜஸ்தானில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு, அதனை உருக்கி நெய்யாக ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

காரணம் என்ன?

இதற்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து, அதில் இருந்து பால் கிரீம் எடுத்து, வெண்ணெய் உற்பத்தி செய்து, அதனை நெய்யாக உருக்கி வந்தனர். அப்போது ஒரு லிட்டர் வெண்ணெயில் இருந்து கிட்டத்தட்ட 820 கிராம் நெய் கிடைத்து வந்ததாகவும், தற்போது மராட்டியம், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்ணெயில் ஒரு லிட்டரில், 780 கிராம் தான் நெய் கிடைப்பதாகவும் இதனை ஈடுசெய்யவே விலை உயர்த்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெய் விலை மட்டுமல்லாது, வெண்ணெய் விலையும் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. நெய், வெண்ணெய் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தனியார் நிறுவனங்களுடன் போட்டி

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், 'ஆவின் நெய் விலை உயர்வால், தனியார் நிறுவனத்தின் பிரீமியம் நெய் விலை அளவுக்கு வந்துவிட்டது. இதன் மூலம் தனியார் நிறுவனத்தின் நெய் விலையோடு, தற்போது ஆவின் நிறுவனம் போட்டியிடுகிறது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த வரலாறு காணாத விலை உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, அதனை திரும்ப பெற வேண்டும்' என்றார்.

ஆவின் நெய், வெண்ணெய் விலை நிலவரம்

நெய், வெண்ணெய் தயாரிப்புகள் பழைய புதிய

விலை விலை

15 மி.லி. பாக்கெட் ரூ.14 ரூ.15

100 மி.லி. பாக்கெட் ரூ.70 ரூ.80

100 மி.லி. ஜார் ரூ.75 ரூ.85

200 மி.லி. ஜார் ரூ.145 ரூ.160

500 மி.லி. ஜார் ரூ.315 ரூ.365

ஒரு லிட்டர் ஜார் ரூ.630 ரூ.700

500 மி.லி. கார்டன் ரூ.310 ரூ.360

ஒரு லிட்டர் கார்டன் ரூ.620 ரூ.690

5 லிட்டர் ஜார் ரூ.3,250 ரூ.3,600

15 கிலோ டின் ரூ.10,725 ரூ.11,880

500 மி.லி. பிரீமியம் ரூ.365 ரூ.410

ஒரு லிட்டர் பிரீமியம் ரூ.680 ரூ.760

500 மி.லி. ஸ்பவுட் ரூ.305 ரூ.355

100 கிராம் சாதாரண ரக வெண்ணெய் ரூ.55 ரூ.60

500 கிராம் சாதாரண ரக வெண்ணெய் ரூ.260 ரூ.275

100 கிராம் பிரீமியம் வெண்ணெய் ரூ.55 ரூ.60

500 கிராம் பிரீமியம் வெண்ணெய் ரூ.265 ரூ.280


Next Story