வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது
காரமடை, கோவில்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரமடை, கோவில்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடு புகுந்து திருட்டு
மேட்டுப்பாளையம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது போல் காரமடை, பொள்ளாச்சி, கோவில்பாளையம் ஆகிய இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையை கதிகலங்க வைத்த 10 பேர் கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 114 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பணம் பறிக்க முயற்சி
சிறுமுகை போலீஸ் நிலைய பகுதியில் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் விஜயானந்தை ஒரு கும்பல் வழிமறித்து பட்டாகத்தியை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், 6 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 14½ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் காரமடை, பொள்ளாச்சியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன. இ்ந்த திருட்டில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த சுரேஷ் என்ற சூட்டு சுரேஷ் (வயது33), தென்காசியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மருதராஜ் என்ற சப் ஜெயில் ராஜா (19), தூத்துக்குடியை சேர்ந்த மருது பாண்டி என்ற மருது ஆகிய 3 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 72 பவுன் நகை மீட்கப்பட்டது.
114 பவுன் நகைகள் மீட்பு
கோவில்பாளையத்தில்3 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டது. இதில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சாலமன் (20), கோவை மயிலம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 27½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.கோவை புறநகரில் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருடிய வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 114 பவுன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சிறப்பாக செயல்பட்டு குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேரை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டி பரிசு சான்றிதழ் வழங்கினார்.