தூய்மை பணிக்கு ரூ.10 லட்சத்தில் 5 பேட்டரி வாகனங்கள்
சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணிக்கு ரூ.10 லட்சத்தில் 5 பேட்டரி வாகனங்களை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணிக்காக 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் கன்னியப்பன், பொறியாளர் ஆசிர்வாதம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், காங்கிரஸ் நகர தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அசோகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு பேட்டரி வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்து, நகராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது நகராட்சி முழுவதும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். நகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, கணேசன், நகராட்சி பணி ஆய்வாளர் மனோஜ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.