கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது


கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
x

கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

கோயம்புத்தூர்


கோவையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

கோவையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, போதை மாத்திரை போன்ற போதை பழக்கங்கள் அதிகளவு இருப்பதாக மாநகர போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் கஞ்சா விற்பனையிலும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் அவ்வப்போது தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

அதில், அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடையவர்கள் என்பதும், இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்து தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கோவையில் சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், அதில் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story